பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இயல்பாகவே மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நின்றுவிடும். இதனை ‘மெனோபாஸ்’ என்று அழைக்கிறோம். ஆனால், தற்காலத்தில் பல பெண்களுக்கு 40 வயதிற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடும் ‘முன்கூட்டிய மெனோபாஸ்’  பிரச்சினை அதிகரித்து வருகிறது. இவ்வாறு இளம் வயதிலேயே மாதவிடாய் சுழற்சி நின்றுபோனால், அது பெண்களின் உடலளவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ஜெய்ப்பூர் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மற்றும் மகளிர் நல நிபுணர் டாக்டர் மானினி பட்டேல் விரிவான விளக்கமளித்துள்ளார். ஒரு பெண்ணுக்கு இயல்பான வயதிற்கு முன்பாகவே மெனோபாஸ் ஏற்படும்போது, வருங்காலத்தில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கூறுகிறார். இதற்கு பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்   ஹார்மோன் அளவு திடீரென குறைவதே முதன்மை காரணமாகும்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனானது பெண்களின் ரத்த நாளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கவும், இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. இளம் வயதிலேயே மெனோபாஸ் ஏற்படும்போது உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு கணிசமாகக் குறைகிறது. இதனால் ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டத்தில் தடங்கல்கள் ஏற்பட்டு ரத்த அழுத்தம்  அதிகரிக்கும் அபாயம் உருவாகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருதல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவையும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றன.

எனினும், இளம் வயதில் மெனோபாஸ் அடையும் அனைத்து பெண்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கும் நிபுணர்கள், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்த ஆபத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர். இதற்காக பெண்கள் சீரான இடைவெளியில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். தினசரி 30 நிமிட உடற்பயிற்சி, சத்தான உணவு முறை, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தவிர்த்தல் ஆகிய ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றுவது மிக அவசியமாகும்.