வீட்டில் செலவைக் குறைப்பதற்காகவோ அல்லது அரிதான பழங்காலப் பொருட்களைப் பிடிக்கும் என்ற காரணத்தினாலோ பலர் பழைய அல்லது உபயோகப்படுத்தப்பட்ட  பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால், புதிய பொருட்களை விடப் பழைய பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வரும்போது, அது நன்மையைத் தருமா அல்லது  விளைவுகளை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் எழுவது இயல்புதான்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல்  உண்டு. பழைய பொருட்களை ஒருவரிடமிருந்து வாங்கும்போது, அப்பொருளை முன்பு பயன்படுத்தியவர்களின் எண்ணங்கள் மற்றும் அவர்களின் வீட்டில் இருந்த ஆற்றல்களும் அப்பொருளோடு சேர்ந்தே நம் வீட்டிற்குள் நுழைகின்றன. இதனால் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஊடுருவி, தேவையற்ற மனக்கலக்கத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே, பழைய பொருட்கள் அல்லது மரச்சாமான்களை வீட்டிற்குள் கொண்டு வரும் முன்பும், கொண்டு வந்த பின்பும் சில வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். முதலில், பழைய பொருட்களைக் கல் உப்பு கலந்த நீரால் நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். கல் உப்புக்கு எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து அழிக்கும் சக்தி உண்டு என்பதால், இது அப்பொருளில் படிந்துள்ள பழமையான கெட்ட ஆற்றல்களை அகற்றி விடும்.

அடுத்ததாக, அந்தப் பொருட்களைச் சில மணி நேரமாவது சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் வைப்பதும், அதன் மீது கங்காதீர்த்தம் தெளிப்பதும் அல்லது கற்பூரம் ஏற்றி அதன் புகையைக் காட்டுவதும் மிகவும் நல்லது. தேவைப்பட்டால் அப்பொருளுக்குப் புதிய வண்ணம்  பூசிப் பயன்படுத்தலாம். இத்தகைய எளிய வாஸ்து பரிகாரங்களைச் செய்வதன் மூலம் பழைய பொருட்களில் உள்ள எதிர்மறை அலைகள் நீங்கி, உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலும் மகிழ்ச்சியும் பெருகும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.