உத்தரப் பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது  ஜவுனா கிராமத்தில் உள்ள வயல்வெளி வீட்டில் கணவன், மனைவி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் பஜ்ரங்கி, அவரது மனைவி கோமல், 3 வயது மகள் ஸ்ரத்தா மற்றும் 1 வயது மகன் ஜெய்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் போலீசாருக்கு பஜ்ரங்கியின் செல்போனில் கிடைத்த வீடியோ முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. அந்த வீடியோவில், தான் தற்கொலை செய்யப் போவதாக பஜ்ரங்கி கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பஜ்ரங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாகவும், பணப் பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினை அல்லது பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் சம்பவ இடத்தில் கிடைத்த சில ஆதாரங்கள் போலீசாருக்கு மேலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. வீட்டில் இருந்து 3 சட்டவிரோத ஆயுதங்கள், ரத்தக்கறை படிந்த கத்தரிக்கோல் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பஜ்ரங்கி, அவரது மனைவி மற்றும் 3 வயது குழந்தையின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருந்ததாகவும், 1 வயது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அருகில் இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியிலும் ரத்தக்கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா செயல்படாமல் இருந்ததும் போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. மதியம் 3 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான முக்கிய நேரத்தில் கேமரா அணைந்திருந்ததாகவும், பின்னர் மக்கள் திரண்டபோது மீண்டும் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது செல்போன் வீடியோ, தடயவியல் ஆதாரங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.