உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற நபரை, அருகில் இருந்த கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உயிரிழந்தவர் கமல் நயன்பூர் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், காதல் தொடர்பான பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது, “என் சகோதரியிடம் தவறாக நடந்துகொண்டதால் அவரைக் கொன்றேன்” என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த குற்றச்சாட்டு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையது என்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தையும் மருத்துவமனையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுவரை நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தனிப்படை அமைத்து வழக்கின் அனைத்து கோணங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உண்மை நிலை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
