கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தராறு தொடர்பான வழக்கைத் திரும்பப் பெறக் கோரி 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த அத்துமீறிய அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. நிலப் பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு, அந்தப் பகைக்காகப் பள்ளி மாணவி என்றும் பாராமல் அவரைக் கத்தியால் மிகக் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமன்றி, பாலியல் ரீதியாகவும் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த விபரீத சம்பவம் குறித்துப் போச்சம்பள்ளி சீர்மிகு சி-3 காவல் நிலையத்தில் (C3 Police Station, Pochampalli) முறைப்படி புகார் அளிக்கப்பட்டும், 10 நாட்களைக் கடந்த நிலையிலும் குற்றவாளிகள் மீது காவல்துறை எந்தவொரு கடுமையான ஆக்ஷனும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக அந்த மாணவியின் தாய்  வேதனையோடு குற்றம் சாட்டியுள்ளார்.

சட்ட ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள இந்த போச்சம்பள்ளி கொடூரச் சம்பவம்,  தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.