கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், தனது கணவர் அருணைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு ஆட்டோ டிரைவர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தனிமைக்கு 6 வயது மகன் அபிஷேக் இடையூறாக இருப்பதாகக் கருதி, கரண்டியைக் சூடுபடுத்தியும் கட்டையாலும் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்துள்ளனர். ஒருமுறை தனது தந்தையிடம், “அம்மாவும் அங்கிளும் என்னை அடிக்கிறாங்க, என்னை உங்களுடனே கூட்டிட்டு போயிடுங்கப்பா” என்று அந்தச் சிறுவன் கதறி அழுதுள்ளான்.
கடந்த 2020ஆம் ஆண்டு, சாய்பாபா காலனி பகுதியில் வைத்து ராஜதுரையும் திவ்யாவும் சேர்ந்து அந்தச் சிறுவனை குச்சியால் கொடூரமாகத் தாக்கியதில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி விவேகானந்தன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். சிறுவனைக் கொன்ற கள்ளக்காதலன் ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தன் சொந்த மகனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய தாய் திவ்யாவுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
