மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) மறுதேர்வு வினாத்தாளும் கசிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடந்த நிலையில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாகக் கூறி எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமை இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பரவி வரும் அந்த வீடியோ முற்றிலும் போலியானது என்றும், தேர்வு நடைமுறைகளை சீர்குலைப்பதற்காக சில சமூக விரோத சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்றும் என்.டி.ஏ. தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கசிவு குறித்து பரவும் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களையும், போலியான வீடியோக்களையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை என்.டி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. தேர்வு தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான தகவல்களையும் தெரிந்துகொள்ள என்.டி.ஏ.-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (www.nta.ac.in) மட்டுமே அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், மறுதேர்வு குறித்தும் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது.
