தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியதுடன், தற்போதைய தவெக (தமிழக வெற்றி கழகம்) ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாகப் புள்ளிவிவரங்களுடன் கடும் பதிலடி கொடுத்தார். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்  அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர், “கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-இல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது” என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த குற்றங்கள் அதிகரித்ததற்கு கடந்த திமுக ஆட்சியில் கட்டுப்படுத்தத் தவறிய போதைப்பொருள் புழக்கமே முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரித்ததாகவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களே இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், திமுக நிர்வாகி ஒருவர் 2 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய தவெக ஆட்சியில் தவறு செய்தவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தலைமையில் சட்டம்-ஒழுங்கு நேர்மையான முறையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 6 மாதங்களுக்குள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் தமிழகம் திகழும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.