விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வரும் இவருக்கு, ரேணுகாதேவி (26) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த ரேணுகாதேவி, பிரசவத்திற்காகச் சிவகாசி மணிநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பிரசவம் நடைபெற்றபோது, திடீரென உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரேணுகாதேவியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மருத்துவர்களின் அலட்சியமே இந்தத் தொடர் உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான உறவினர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ₹50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகைப் போராட்டம் நீடித்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இச்சோக விபத்து குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
