மத்திய பிரதேசத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி நீட் வினாத்தாள்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்த சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வாயிலாக நீட் வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏமாற்றி, போலி வினாத்தாள்களை தலா ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து, சுமார் ரூ.30,000 வரை அந்த மாணவர் மோசடி செய்தது அம்பலமானது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நடத்தப்பட்டது. இருப்பினும், பீகார் மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த மறுதேர்விலும் முறைகேடுகள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பயோமெட்ரிக்’ சரிபார்ப்பில் முறைகேடு செய்த 18 ஊழியர்கள், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்ற 9 பேர் மற்றும் இடைத்தரகர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினாத்தாள் விற்பனை செய்வது முதல், ஆள்மாறாட்டம் வரை நீட் தேர்வில் தொடரும் இதுபோன்ற முறைகேடுகள், தேர்வு நடைமுறைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.