கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான நாகராஜ் (60) என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் எப்போதும் தனது கழுத்தில் மீன் டாலர் பொறித்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை ஆசையுடன் அணிந்திருந்ததால், உறவினர்கள் அந்த நகையுடனேயே அவரது உடலை மாநகராட்சி மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். இதனை நோட்டமிட்ட அவரது வீட்டின் அருகே வசிக்கும் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர், மயானப் பணியாளர் கார்த்திகேயனுக்கு 30 ஆயிரம் ரூபாய் பண ஆசை காட்டி, நள்ளிரவில் சடலத்தின் தலைப்பகுதி இருந்த இடத்தை தோண்டி இந்த துணிகர நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நாகராஜ் இறந்து 16-வது நாள் காரியத்திற்காக அவரது மகன் வெங்கடேஷ்குமார் மற்றும் உறவினர்கள் மயானத்திற்குச் சென்றபோது, உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டு இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மயானத்தில் வேலை செய்யும் கார்த்திகேயனிடம் உறவினர்கள் நடத்திய அதிரடி விசாரணையில், அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து நகையைத் திருடி விற்றுப் பணத்தைப் பகிர்ந்து கொண்டது அம்பலமானது. உடலை அடக்கம் செய்யும் போது கூடவே இருந்துவிட்டு, பின்னர் பணத் திண்டாட்டத்தால் இறந்தவரின் உடலிலேயே கைவரிசை காட்டிய இந்த மனிதாபிமானமற்ற செயல் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய சக்திவேல், மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீதும் பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
