தென்கொரியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவி ஒருவர், தான் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழியில் எதிர்கொண்ட மிக அதிர்ச்சிகரமான மற்றும் ஆபத்தான அனுபவத்தைக் வீடியோவாக வெளியிட்டுள்ளது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த கொரிய நபர் ஒருவர், அந்த மாணவியிடம் ஹோட்டல்கள் எங்கு இருக்கின்றன என்று வழி கேட்பது போல் நடித்து, தன்னை காரில் ஏறுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

மாணவி தனக்கு வேலை இருப்பதாகக் கூறி மறுத்த போதிலும், அந்த நபர் விடாமல் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதே நபர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையில் ‘விக்’ (Wig) மாட்டி மாறுவேடத்தில் வந்து, மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டு அந்த மாணவியை மிரள வைத்துள்ளார்.

​இந்த பயங்கரமான சம்பவத்தை அந்த மாணவி வீடியோவாகப் பகிர்ந்து, வெளிநாடுகளில் வாழும் இளம் பெண்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், கொரிய நாடகங்களையும் (K-Dramas) கொரிய பாப் (K-Pop) கலாச்சாரத்தையும் பார்த்துவிட்டு கொரியா சொர்க்கம் என்று நம்பும் இந்தியப் பெண்களுக்கு இது ஒரு சாட்டையடி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தென்கொரியாவில் இனவெறியும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் மிக அதிகமாக இருப்பதாகவும், அங்குள்ள ஆண்களின் உண்மையான முகம் வெளியில் தெரிவதைப் போல் கொரிய நாடகங்களில் காட்டுவதில்லை என்றும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர்.