மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற அரசு விழாவின் போது, பெண் ஒருவர் முதலமைச்சர் மோகன் யாதவின் பாதுகாப்பு வளையத்தை அதிரடியாக உடைத்துக் கொண்டு, தன் மகளின் பாதுகாப்புக்காக அவரது காலில் விழுந்து கதறிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் பக்கத்து வீட்டு இளைஞன் ஒருவன், அந்தப் பெண்ணின் மகளைக் கொடூரமாகத் தாக்கி, அவளது ஆடையைக் கிழித்து அராஜகம் செய்துள்ளான்.

இதுகுறித்து ஆதாரங்களுடன் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டும், போலீசார் இதுவரை எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளியைக் கைது செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். ​அதிகாரிகள் தங்களைக் கண்டுகொள்ளாததால் விரக்தியடைந்த அந்தத் தாய், வேறு வழியின்றி பொது மேடையில் இருந்த முதலமைச்சரை நோக்கி ஓடிச் சென்று, தன் மகளைக் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சியுள்ளார்.

இதைக் கண்டு நெகிழ்ந்து போன முதலமைச்சர் மோகன் யாதவ், “நீ என் சகோதரி, உனக்குக் கண்டிப்பான நீதி கிடைக்கும்” என்று மேடையிலேயே உருக்கமாக வாக்குறுதி அளித்து ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே, புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டது குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.