மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்னின்று மத்தியஸ்தம் செய்த இக்கூட்டத்தில், சர்வதேச வர்த்தகப் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி எப்போதும் திறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தவும், லெபனானில் தொடர்ந்து வரும் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் இருதரப்பிலும் முக்கிய ஒப்புதல் எட்ட சுவிட்சர்லாந்தில் இருநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இடையே சுமுகமான முறையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடினால், அந்த நாடே பூமியில் இல்லாமல் போய்விடும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்த வர்த்தகப் பாதையை ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும் என்றும் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
