ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து திருவிழா விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், நடுவர்களின் சைகை விவாதங்களைத் தொடர்ந்து தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ள உலகக் கோப்பை மைதானம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவே இந்த புதிய விவாதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. தான் பணியில் இருந்தபோது, தனது காலணியில் இருந்த பிரபல ‘நைக்’ (Nike) நிறுவனத்தின் லோகோவை (Logo) மறைக்குமாறு அங்கிருந்த நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழியர்கள் யாரும் எந்தவொரு குறிப்பிட்ட பிராண்ட் லோகோக்கள் அடங்கிய ஆடைகளையோ அல்லது பொருட்களையோ அணியக் கூடாது என மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும், மீறி அணிந்தால் அதை ஒட்டுநாடா (Duct Tape) கொண்டு மறைக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஃபிஃபா உலகக் கோப்பையில் நைக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
American working at the FIFA World Cup at the San Francisco Bay Area Stadium says FIFA is so strict with not allowing any branding, they make employees duct tape over the logos on their shoes
She wore Nikes to work, FIFA made her cover her shoes in duct tape to not show the… pic.twitter.com/fJcYyDXZGU
— Wall Street Apes (@WallStreetApes) June 21, 2026
உண்மையில், இந்த நடவடிக்கை நைக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட பிரத்யேகத் தடை அல்ல என்று விளையாட்டு வட்டாரங்கள் விளக்குகின்றன. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா (FIFA), தனது உலகக் கோப்பை போட்டிகளின் போது நீண்ட காலமாகவே ‘க்ளீன் ஸ்டேடியம்’ (Clean Stadium Policy) என்ற கடுமையான விளம்பரக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இதன்படி, போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக ஸ்பான்சர் (Sponsor) செய்யாத நிறுவனங்களின் லோகோக்கள் மைதானத்தின் உள்ளேயோ, ஊழியர்களின் ஆடைகளிலோ அல்லது மைதானத்தைச் சுற்றியோ வெளிப்படையாகத் தெரியக் கூடாது.
ஃபிஃபா உலகக் கோப்பையின் முதன்மை வணிகக் கூட்டாளியாக ‘அடிடாஸ்’ (Adidas) நிறுவனம் இருக்கும் வேளையில், நைக் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் இல்லை. இதன் காரணமாகவே, ஸ்பான்சர் அல்லாத பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் அங்கீகரிக்கப்படாத வகையில் தெரிவதைத் தவிர்க்க ஊழியரின் காலணி லோகோ மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவாதங்களுக்கு மத்தியிலும் நைக் மற்றும் அடிடாஸ் நிறுவனங்கள் தங்களின் உலகக் கோப்பை விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
