சமூக வலைதளத்தில் மலர்ந்த காதல், ஊரை விட்டு ஓடிப்போய் ரயில் நிலையத்தில் நடந்த திருமணம், அதன் பிறகு நேர்ந்த திடீர் சோகம் என பீகாரில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி மனிஷா குமாரிக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தில்குஷ் குமாருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த நட்பு தீவிர காதலாக மாறியுள்ளது. இருவரும் தங்களது எதிர்காலம் குறித்து பல்வேறு கனவுகளைக் கண்டுள்ளனர்.

இந்நிலையில், மனிஷாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயிக்க முயன்றுள்ளனர். இதனை ஏற்க மறுத்த மனிஷா, தன் காதலன் தில்குஷுடன் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தார். இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி  ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள நிலையத்தில் வைத்து தில்குஷ் மனிஷாவை திருமணம் செய்துகொண்டார். அன்றைய இரவு முழுவதையும் அந்த இளம் ஜோடி ரயில் நிலையத்திலேயே கழித்துள்ளது. தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதாக அவர்கள் இருவரும் நம்பிய அந்த மகிழ்ச்சி, சில மணி நேரங்களிலேயே சோகத்தில் முடியும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

திருமணம் முடிந்த அடுத்த நாள் மாலை, இருவரும்புகழ்பெற்ற ஒரு  கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யப் புறப்பட்டுள்ளனர். கோயில் நடைபாதையை நோக்கி அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வெயிலின் தாக்கம் மற்றும் உடல் சோர்வு காரணமாக மனிஷாவுக்குச் சுழன்று தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. தான் மிகவும் அசௌகரியமாக உணர்வதாக அவர் கூறியுள்ளார்.

சிறிது நேரத்திலேயேய அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கவே, காதலன் தில்குஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் அருகில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார். உடனடியாக உள்ளூர் மக்களின் உதவியோடு மனிஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மனிஷாவை மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்தனர். ஆனால், மருத்துவர்களின் அத்தனை முயற்சிகளும் வீணாகிப்போனது. மனிஷா பரிதாபமாக உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தன் வாழ்வின் துணையாக வருவாள் என்று நம்பிய காதலி கண்ணிமைக்கும் நேரத்தில் கண்முன்னே இறந்து கிடப்பதைக் கண்டு தில்குஷ் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.

தகவலறிந்ததும் மருத்துவமனை காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து வந்து மனிஷாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனிஷா திடீரென இறந்துபோனதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மனிஷாவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தன் மகள் வீட்டைவிட்டு ஓடிப்போன சோகத்தில் இருந்த குடும்பத்தினருக்கு, அவர் இறந்துவிட்டதாக வந்த செய்தி பேரிடியாக இறங்கியது. காதலன் தில்குஷை காவலில் எடுத்துள்ள போலீசார், இன்ஸ்டாகிராம் காதல் முதல் ரயில் நிலையத் திருமணம் மற்றும் திடீர் மரணம் வரையிலான அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.