ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தான் வளர்க்கும் பசுவின் மீது வைத்துள்ள விசுவாசத்தால் தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளார். தன் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கும் அந்தப் பசுவுக்கு அவர் செய்துள்ள ஆடம்பரச் செலவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அதாவது தொழிலதிபரும், ரயில்வே ஒப்பந்தக்காரருமான நரேந்திர புரோகித் என்பவருக்குச் சொந்தமான ‘ராதா’ என்ற காங்கிரஜ் இனப் பசுதான் தற்போது அப்பகுதியின் ஹாட் டாபிக். கடந்த 2019-ஆம் ஆண்டு நரேந்திர புரோகித் வீட்டிற்கு வந்த இந்தப் பசு, தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக அவர் கூறுகிறார்.
ஒரு காலத்தில் மாதத்திற்கு வெறும் 1,500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வந்த நரேந்திர புரோகித், ராதா தன் வீட்டிற்கு வந்த பிறகு தொழிலில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளார். தற்போது சொந்தமாகக் கட்டுமான நிறுவனம் நடத்துவதுடன், ரயில்வே ஒப்பந்தங்களையும் எடுத்து நடத்தி வருகிறார். தன் குடும்பத்தின் வளர்ச்சிக்குக் காரணமான இந்தக் பசுவை அவர் தெய்வமாகவும், குடும்ப உறுப்பினராகவும் பாவித்து வருகிறார்.
பசு மீதான தனது எல்லையற்ற அன்பைக் வெளிப்படுத்தும் வகையில், தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற விசேஷ நாட்களில் ராதாவுக்கு 10 கிலோ எடையுள்ள வெள்ளி ஆபரணங்களால் பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நகைகளின் சந்தை மதிப்பு சுமார் 24 லட்சம் ரூபாய் ஆகும். இதுமட்டுமின்றி, ராதாவுக்காகவே பிரத்யேகமாக கழுத்து நகைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட நெற்றிச்சுட்டி போன்றவையும் செய்யப்பட்டுள்ளன. இதைக் கவனித்துக்கொள்ள மட்டும் தனித்தனியாக 7 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் வீட்டில் தன் அருகிலேயே ராதாவை வைத்துப் பராமரித்து வந்த நரேந்திர புரோகித், பொதுமக்களின் பேச்சைக் கருத்தில் கொண்டு ராதாவுக்கென்றே தனி மாளிகையைக் கட்ட முடிவு செய்தார். அதன்படி, சுமார் 200 கஜ நிலப்பரப்பில் 1 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி பிரம்மாண்ட ‘ராதா மஹால்’ கட்டப்பட்டு வருகிறது.
இதன் தரைத்தளம் முழுவதுமாக ராதா சுதந்திரமாக நடமாடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும், தீவனம் உண்பதற்கும் ஒதுக்கப்பபட்டுள்ளது. மேல் தளத்தில் சாதுக்கள் தங்குவதற்கும், யாகங்கள் நடத்துவதற்கும் மற்றும் பக்தர்கள் அமர்வதற்குமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, கடந்த 2021-ஆம் ஆண்டு சஞ்சோர் பகுதியில் உள்ள பத்மேடா கோசாலையில், ராதாவிற்கும் ஒரு காளை மாாட்டிற்கும் முறைப்படி ஊர் மக்கள் புடைசூழ பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரே கூடி இந்தத் திருமணத்தை நடத்தி, பின்னர் அந்த ஜோடியை பல்வேறு புனிதத் தலங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த கோ சேவை தங்களின் மிகப்பெரிய கடமை என்று இந்தக் குடும்பம் பெருமிதத்துடன் தெரிவிக்கிறது.
