பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் நடந்த ஒரு குடும்பத் தகராறு முற்றியதில், நபர் ஒருவர் தனது தந்தை மற்றும் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலைக்குப் பிறகு தலைமறைவாகியுள்ள குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஜலந்தர் நகர் அவதார் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஹிரா லால். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இந்தத் தகராறு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர்  தன் சொந்தத் தந்தையான அயோத்யா பிரகாஷ் மற்றும் தனது மனைவி சவிதா ஆகிய இருவர் மீதும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட இந்தச் செய்தி காட்டுத் தீ போலப் பரவியதால், அப்பகுதியில் பெரும் மக்கள் திரண்டு கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்தச் பயங்கரச் சம்பவம் நடக்கும்போது, வீட்டில் முதல் தளத்தில் குற்றவாளியின் வயதான தாயாரும் இருந்துள்ளார். அவர் உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். போலீசார்  உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதல் கட்ட விசாரணையில், குற்றவாளி  போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.