அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில், அமெரிக்க தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்  சுவாரசியமான கருத்து ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், “பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் எங்களை வரவேற்றது முதல், நான் ஒரு உண்மையை நகைச்சுவையாகச் சொல்லி வருகிறேன். எனது வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான மனிதர்கள் இருவர் உள்ளனர். அதில் ஒருவர் இந்தியர், மற்றொருவர் பாகிஸ்தானியர். அந்த இந்தியர் வேறு யாருமல்ல, எனது மனைவி உஷா வான்ஸ்; அந்தப் பாகிஸ்தானியர் இங்கு நின்றுகொண்டிருக்கும் பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் தான்” என்று மேடையில் இருந்த பாகிஸ்தான் தலைவர்களின் முன்னிலையிலேயே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

 

அமெரிக்க துணை அதிபரின் இந்த பேச்சு தற்போது உலகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து பேசிய ஜே.டி. வான்ஸ், “கடந்த மூன்று மாதங்களில் நான் மற்ற யாரைக்காட்டிலும் இந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரிடம் தான் அதிகமுறை விவாதித்திருப்பேன். அவரது சிறந்த ராஜதந்திரமும், ராணுவத் தலைமையும் இல்லையென்றால் அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமாகியிருக்காது” என்று பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான பாகிஸ்தானின் பங்களிப்பைப் வெகுவாகப் பாராட்டினார். ஆந்திரப் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்திய வம்சாவளிப் பெண்ணான உஷா வான்ஸை ஜே.டி. வான்ஸ் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளின் உற்றுநோக்கலில் இருக்கும் இந்த சுவிட்சர்லாந்து மாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய நல்லுறவை ஏற்படுத்தவும், லெபனான் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் தூதரக ரீதியாகப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.