கிரிக்கெட் உலகை உலுக்கும் ஒரு புதிய அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இலங்கைத் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி எங்கு மோதப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட பரபரப்பான டி20 தொடர் உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உற்சாகத்தைத் தந்திருந்தாலும், மறுபுறம் இந்திய அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை முற்றிலுமாக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த செவ்வாய்க்கிழமைஇந்த அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரை ஆப்கானிஸ்தான் வாரியமே நடத்தினாலும், போட்டிகள் அனைத்தும் இந்தியாவின் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்தான் நடைபெறுகின்றன.

ஆனால், இந்த திடீர் தொடர் அறிவிப்பால் சிக்கலில் மாட்டியிருப்பது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்தான். செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 13 வரையிலான இடைவெளியில் இந்திய அணியைத் தங்கள் நாட்டிற்கு அழைத்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நடத்த பங்களாதேஷ் தீவிரமாக முயன்றது. அதற்காக அந்த நாட்டின் முன்னாள் நட்சத்திர வீரரும், வாரியத் தலைவருமான தமீம் இக்பால், இந்திய அரசு மற்றும் பிசிசிஐ-யை  சமாதானப்படுத்த அரசாங்கத்தின் உதவியைக் நாடியும் பார்த்தார்.

ஆனால், செப்டம்பர் 13 முதல் 17 வரை இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளதால், பங்களாதேஷ் தொடருக்கான கால அவகாசம் முற்றிலும் அடிபட்டுப் போயுள்ளது. பிசிசிஐ தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளைப் போலவே இந்த முறையும் பங்களாதேஷ் பயணம் மூன்றாவது ஆண்டாகத் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.