கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ (24) என்ற பெண் கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த அமல் என்பவருக்கும் காதல் மலர்ந்து, இருவீட்டார் சம்மதத்துடன் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தனது தங்குமிடத்தில் அனுஸ்ரீ தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் இருந்த அவரது வருங்காலக் கணவரான அமலும் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவத்தன்று இருவரும் நீண்ட நேரமாக வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடியோ காலில் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே இரு மாநிலங்களிலும் இந்தத் தற்கொலைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளதால், இருவருக்கும் இடையே என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில், கைநிறையச் சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்த காதல் ஜோடி திடீரென இந்த முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்துக் கர்நாடகா மற்றும் கேரள மாநிலக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்தச் சம்பவம்.
