திரையுலகில் ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சந்தித்து வந்த நரக வேதனையான காதல் வாழ்க்கை குறித்தும், அதில் அனுபவித்த ‘நார்சிசிஸ்டிக்’ மனரீதியான கொடுமைகள் குறித்தும் முதன்முறையாக மனம் திறந்து பேசியிருப்பது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெளியில் இருந்து பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிந்த தனது வாழ்க்கையின் பின்னணியில், உடலாலும் மனதாலும் சிதைக்கப்பட்ட மிகப்பெரிய சோகம் ஒளிந்திருந்ததாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தனது முன்னாள் காதலரின் மாறிப்போகும் குணநலன்களைப் பிரபல ‘அந்நியன்’ திரைப்படக் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அனுபமா, “சில நாட்களில் அவர் ‘ரெமோ’ போல அளவு கடந்த அன்பைப் பொழிவார்.
மேலும் அப்படி ஒரு துணைக் கிடைத்ததற்கு நாம் கொடுத்து வைத்தவர் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அடுத்த நாளே ‘அந்நியன்’ போல மிகக் கொடூரமாக நடந்து கொள்வார். பின்னர் ஒரு குழந்தையைப் போல அழுது மன்னிப்புக் கேட்டு இனிமேல் இப்படி நடக்காது என்பார்.
நம்மை மிக மோசமாக காயப்படுத்துபவனே, பிறகு வந்து ஆறுதலும் தருவான். இது ஒருவித அடிமைத்தனமான சூழலுக்கு நம்மைத் தள்ளிவிடும். நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை என்றாலும், எல்லாவற்றிற்கும் நாமே தான் காரணம் என்று நம்மையே நம்ப வைத்துவிடுவார்கள்” என்று அந்த நச்சுப் பிடியின் கொடூரத்தை விவரித்துள்ளார்.
மேலும், இந்த காதலால் தனது சினிமா வாழ்க்கையும், மன அமைதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், தனது பெரிய வெற்றிப் படமான ‘டிராகன்’ பட விளம்பரங்களில் கூட பங்கேற்க முடியாத அளவிற்குத் தனக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
3 மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் செய்ய வற்புறுத்தியபோது, அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து தான் மறுத்ததாகவும், அதற்காகத் தன்னை பண ஆசை பிடித்தவர் என்று சித்தரித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும் அவர் பேசியுள்ளார்.
இதனால் “அந்த சமயத்தில் நான் தற்கொலை செய்துகொண்டிருந்தால் பலரும் என் மீது பரிதாபப்பட்டு அன்பு காட்டியிருப்பார்கள். ஆனால் நான் அமைதியாக மீண்டு வரத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியுள்ள அனுபமா, இதுபோன்ற நச்சு உறவுகளில் சிக்கியிருக்கும் பெண்கள் உடனடியாக விழித்துக்கொண்டு அதில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் தைரியமாக அறிவுறுத்தியுள்ளார்.
