குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு அப்பாவின் மரபணு காரணமா அல்லது அம்மாவின் மரபணு காரணமா என்ற சுவாரசியமான கேள்விகளுக்கு அறிவியல் ஆய்வுகள் தெளிவான பதில்களை வழங்குகின்றன. உலகப் பணக்காரரான எலான் மஸ்க் போன்ற பலர் தங்களைப் போன்ற அறிவார்ந்த குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக விந்து தானம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அறிவாளி தந்தைக்கு அறிவாளி குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் உண்மையல்ல என்று அறிவியல் கூறுகிறது.

இதற்கு சான்றாக, கடந்த 1980-களில் அமெரிக்காவில் மிகவும் திறமையான மற்றும் அறிவாளி ஆண்களின் விந்தணுக்களை மட்டும் சேகரித்து ஒரு விந்து வங்கி உருவாக்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 215 குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவர்கள் யாரும் பிற்காலத்தில் பெரிய மேதைகளாகவோ அல்லது அறிஞர்களாகவோ மாறவில்லை; மாறாக அனைவரையும் போல சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

ஆராய்ச்சிகளின்படி, குழந்தையின் அறிவுக் கூர்மை மற்றும் புத்திசாலித்தனத்தை நிர்ணயிப்பதில் தந்தையை விட அம்மாவின் மரபணுக்களே மிக முக்கியக் காரணியாக விளங்குகின்றன. பெண்களிடம் உள்ள இரண்டு ‘X’ குரோமோசோம்களில்தான் அறிவாற்றலுக்கான மரபணுக்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எலிகளிடம் நடத்தப்பட்ட அறிவியல் சோதனையில், மூளையின் சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்தும் ‘செரிப்ரல் கார்டெக்ஸ்’ பகுதியில் தந்தையின் மரபணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. தந்தையின் மரபணுக்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதியில் மட்டுமே இருப்பது தெரியவந்தது. அதேவேளையில் சிந்தனைத் திறன் பகுதியில் தாயின் மரபணுக்களே ஆதிக்கம் செலுத்தின.

எனவே, ஒரு குழந்தையின் புத்திசாலித்தனம் மற்றும் ஐக்யூ  அளவை நிர்ணயிப்பதில் அம்மாவின் மரபணுவே பிரதான பங்கு வகிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம் ‘தந்தையின் அறிவுதான் குழந்தைக்கு வரும்’ என்ற பழைய எண்ணத்தை முறியடித்து, தாயின் மரபணுவே குழந்தையின் அறிவுக் கூர்மைக்கு முக்கியக் காரணம் என்பதை அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது.