பகலில் நன்றாக இருக்கும் சுவாசம், இரவில் படுத்தவுடன் மூக்கு அடைத்துக் கொள்வது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். நாம் படுக்கும் போது உடலின் நிலை மாறுவதால், மூக்கில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்துத் திசுக்கள் லேசாக வீங்குகின்றன. இதனாலேயே காற்று செல்லும் பாதை குறுகி மூக்கடைப்பு ஏற்படுகிறது. இதைச் சாதாரண சளி என்று அலட்சியப்படுத்தாமல், அதன் பின்னணியில் இருக்கும் காரணங்களை அறிவது அவசியமாகும்.
இரவில் மூக்கடைப்பு ஏற்படுவதற்குப் படுக்கையறையில் இருக்கும் தூசி, தலையணை மற்றும் மெத்தைகளில் வாழும் நுண்பூச்சிகள் முக்கியக் காரணமாகும். இவை தவிர, மூக்கின் நடுவெலும்பு வளைந்திருப்பது, மூக்கில் சதை வளர்ச்சி, கர்ப்பகால ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஏசி அறையின் வறண்ட காற்று போன்றவையும் மூக்கடைப்பை அதிகரிக்கச் செய்கின்றன. மேலும், இரவு உணவைச் சாப்பிட்டவுடன் படுப்பதால் ஏற்படும் ‘அசிடிட்டி’ பிரச்சனைகூடத் தொண்டை மற்றும் மூக்குப் பகுதியை எரிச்சலடையச் செய்து அடைப்பை உண்டாக்கலாம்.
இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கப் படுக்கையறையை எப்போதும் சுத்தமாக வைப்பதுடன், தலையணை உறைகளை அடிக்கடி துவைக்க வேண்டும். படுக்கும் போது தலையைச் சற்று உயரமாக வைத்துத் தூங்குவதும், உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மூக்கடைப்பைக் குறைக்க உதவும். சுய மருத்துவம் செய்து மூக்கு ஸ்ப்ரேக்களை தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் அது பிரச்சனையை மேலும் தீவிரமாக்கக்கூடும்.
இரவில் ஏற்படும் மூக்கடைப்பால் வாய் வழியாகச் சுவாசிக்கும் நிலை உருவாகி தூக்கம் கெடுகிறது. தரமான தூக்கம் இல்லாததால் அடுத்த நாளில் சோர்வு, தலைவலி, கவனக்குறைவு மற்றும் வேலைத்திறன் குறைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இது வெறும் மூச்சுப் பிரச்சனை மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த உடல்நலனையும் பாதிக்கும் ஒரு முக்கியமான விஷயமாக மாறுகிறது.
இந்த மூக்கடைப்பு இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தாலோ, அல்லது அடிக்கடி கடுமையான தலைவலி, முகத்தில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தாலோ உடனடியாகக் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பத்திலேயே சரியான காரணத்தைக் கண்டறிந்தால் எளிய முறையிலேயே இதைக் குணப்படுத்தி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.
