நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை, இலங்கையின் புகழ்பெற்ற காலி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆனால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் விளையாடச் சென்றுள்ள இளம் இந்திய அணிக்கு, இந்த முதல் மைல்கல்லே மிகப்பெரிய சவாலாக அமையப் போகிறது.

இந்திய அணியில் உள்ள பெரும்பான்மையான வீரர்களுக்கு காலியின் சிவப்பு பந்து  கிரிக்கெட் சூழல் முற்றிலும் புதியது. கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட பல வீரர்கள் இலங்கையில் வெள்ளை பந்து கிரிக்கெட் (ஒருநாள் மற்றும் டி20) ஆடியிருந்தாலும், டெஸ்ட் போட்டிக்கான களம் முற்றிலும் மாறுபட்டது. அணியில் உள்ள வெறும் மூன்று வீரர்களுக்கு மட்டுமே இங்கு முன்பு விளையாடிய அனுபவம் உள்ளது.

இந்த மைதானத்தின் அமைப்பே எதிரணி வீரர்களை மிரள வைக்கும் தன்மை கொண்டது. இமாலய அரங்கங்களுக்குப் பதிலாக, இந்திய மைதானங்களைப்போல் அல்லாமல், காலி மைதானம் இரண்டு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளது. பெரிய ஸ்டாண்டுகள் இல்லாமல் திறந்தவெளியாக இருப்பதால், கடலில் இருந்து வீசும் கடுமையான காற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டையுமே கடுமையாகப் பாதிக்கும்.

இலங்கையின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஃபர்வீஸ் மஹ்ரூஃப் இதுகுறித்து ஒரு நேர்காணலில் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். “எங்கள் அணியின் முக்கிய அஸ்திரம் பிரபாத் ஜெயசூரியா. அவரை நாங்கள் ‘காலியின் ராஜா’ என்று அழைக்கிறோம்,” எனக் கூறிய அவர், ஜெயசூரியாவின் பலம் குறித்து விவரித்தார். காலி மைதானத்தில் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரியா,  81 விக்கெட்டுகளைக் குவித்து எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார்.

காற்றின் திசையைப் புரிந்து பந்துவீசுவதில் வல்லவரான ஜெயசூரியா, காற்றைப் பயன்படுத்தி பந்தை ‘டிரிஃப்ட்’ செய்வதில் கைதேர்ந்தவர். இந்திய அணியில் அனுபவமிக்க ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்கள் இருந்தாலும், காலி மைதானத்தின் இந்த கடல் காற்றுச் சூழலில் பந்துவீசுவது அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். காற்றுடன் எவ்வளவு விரைவாகத் தங்களை இந்தியப் பந்துவீச்சாளர்கள் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வெற்றியும் அடங்கியுள்ளது.