அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போர், தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலால் தொடங்கிய இந்தப் போரில், இரு நாடுகளுக்கும் பெரும் உயிர்ச்சேதமும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டதுடன் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடும் நிலவியது.

தற்போது இரண்டு வார காலத்திற்குத் தாக்குதல்களை நிறுத்தி வைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இது குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த முடிவு அமைதிக்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப்பின் இந்த போர் நிறுத்த அறிவிப்பு சர்வதேச சந்தையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அமெரிக்காவிற்குள் அவருக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஈரானின் நிபந்தனைகளுக்கு அதிபர் பணிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டும் அந்நாட்டு செனட்டர்கள், இது அமெரிக்காவின் தோல்வி என விமர்சித்துள்ளனர்.

குறிப்பாக, கடல்வழிப் பாதையில் ஈரானின் ஆதிக்கம் அதிகரிக்க அதிபர் வழிவகை செய்துவிட்டதாகக் கூறி, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனினும், முப்பத்தியெட்டு நாட்களிலேயே ராணுவ இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதாகவும், இது அமெரிக்காவிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.