அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிணக்குகளைத் தீர்ப்பது குறித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரான் முன்வைத்த பத்து முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஈரானுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அந்நாட்டு ஊடகங்கள் கொண்டாடி வருகின்றன. ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானதாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் முழுமையான அதிகாரத்தை அங்கீகரிப்பது, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்குவது மற்றும் அணுசக்தி திட்டங்களுக்கான யுரேனியம் செறிவூட்டலுக்கு அனுமதி அளிப்பது போன்றவை இடம்பெற்றுள்ளன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் போர் இழப்பீடாகப் பெரும் தொகையை வழங்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்தத் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும், இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தொடர்ந்து வருகிறது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்தப் போர் நிரந்தரமாக முடிவுக்கு வருமா என்பது குறித்துத் தெரியவரும் என்பதால் உலக நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.