உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் மாயமாகியுள்ளதாகவும் வெளியுறவாக் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக சம்பளம் மற்றும் போலி வேலை வாக்குறுதிகளை அளித்து ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள், அங்கு கடுமையான சூழலில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
மேலும் சமீபத்தில் ஜம்முவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சச்சின் கஜூரியாவின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டது இந்த சோகத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. இதுவரை ரஷிய ராணுவத்தில் சுமார் 214 இந்தியர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் தீவிர முயற்சியால் 135 இந்தியர்கள் பத்திரமாக விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் எஞ்சியுள்ள 35 இந்தியர்களை விடுவிக்க மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், போர்க்களத்தில் காணாமல் போன 12 பேரின் நிலை குறித்து உறவினர்கள் பெரும் கவலையில் உள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் இது போன்ற போலி ஏஜெண்டுகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
