கர்நாடக மாநிலம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. துரித உணவகம் நடத்தி வரும் இவருக்கு, சுசித்ரா என்ற மனைவியும், தியா (6) என்ற மகளும், தக்ஷ் (1½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 9-ஆம் தேதி காலை, சுசித்ரா வழக்கம் போல் தனது மகள் தியாவைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விடுவதற்காக, தனது 1½ வயதுக் குழந்தை தக்ஷைக் கைகளில் ஏந்தியபடி வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சுமார் 40 அடி உயரமுள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று திடீரென விடுபட்டு அதிவேகமாகக் கீழே விழுந்தது. அத்தோடு, அது சுசித்ராவின் கையில் இருந்த குழந்தை தக்ஷின் தலையில் பலமாகத் தாக்கியதில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு உடனடியாக மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பிஞ்சு குழந்தை தக்ஷ் பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையின் உடலைப் பார்த்து பிரசாந்த் பூஜாரி – சுசித்ரா தம்பதியினர் கதறி அழுதது பார்ப்பவர் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியான இக்கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
