ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா (31), தனது கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோரின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு 12 வயது மகன், 11 வயது மகள் உள்ளனர். ரஞ்சிதாவிடம் வரதட்சணையாக பணம் மற்றும் நகைகள் கேட்டும், தொடர்ந்து குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதாக தெரிகிறது.
மேலும் அநாகரிகமாக, மாமனார் அண்ணாதுரை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனையை ரஞ்சிதா தனது கணவரிடம் கூறினாலும், அவர் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனால் மன உளைச்சலில், கடந்த இரவு ரஞ்சிதா மண்ணெண்ணெய் ஊற்றி தன்னை தீக்கொளுத்திக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு, முதலில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றியபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரஞ்சிதா உயிரிழக்கும் முன் எடுத்து வைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், “என் தற்கொலைக்கு காரணம் என் கணவரும், மாமனாரும், மாமியாருமே. மாமனார் என்னை பின்னிருந்து கட்டிப்பிடித்து தவறாக நடந்து கொண்டார்.
இந்த அவமானத்தால் தான் உயிரை விட்டேன்,” என கதறி கூறும் காட்சி இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில், பலர் கோபமும் வேதனையையும் வெளியிட்டு வருகின்றனர்.
