ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்திய வேளையில், தமிழினத்தின் பின்னடைவுக்குச் சகோதர யுத்தமும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது எனப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானதுஎன்று அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயல்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்தத் துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது என்று டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். மேலும், அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதப் பேச்சினை உடனடியாகத் திரும்பப்பெற்று, சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தனது அறிக்கை வாயிலாக அவர் பலத்த கோரிக்கை விடுத்துள்ளார்.