சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற கட்சிகளின் ஆதரவு என்ற இரவல் கால்களில் தான் நின்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரைதான் இந்த ஆட்சி நீடிக்கும் என்றும், எத்தனை நாட்களுக்கு இது தாங்கும் என்று தெரியவில்லை என்றும் சாடினார்.
மேலும், மாநிலத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிந்தும் விஜய் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், திட்டங்களை அறிவிக்கிறார்களே தவிர அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதைச் சொல்லவில்லை என்றும், மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபாய் தருவதாகக் கூறியது வெற்று வாக்குறுதியா அல்லது நிறைவேற்றுவார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகக் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அரசு அதிகாரிகளே அரசாங்கத்தை நடத்தினால் முதலமைச்சர் எதற்கு என்று மக்கள் கேட்பதாகக் குறிப்பிட்டார்.
பதவி வந்துவிட்டால் தலைகால் புரியாமல் ஆடுபவர்கள் பணிவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றீர்களே தவிர மக்களுக்குச் சேவை செய்து ஜெயிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
அதிமுக என்பது தீர்ந்துபோன கட்சி அல்ல, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த கட்சி என்று பெருமிதம் கொண்ட அவர், எந்தக் கொம்பனாலும் அதிமுகவை உடைக்க முடியாது என்றும், மீண்டும் அதிமுக ஆட்சியே அமையும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
இறுதியாக, அதிமுகவில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள நான்கு பேரை வரலாறு மன்னிக்காது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
