சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்களது தொடர் தோல்விகள் குறித்து எழும்பும் விமர்சனங்களுக்கு மிக ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். உலக வரலாற்றிலேயே இவ்வளவு தோல்விகளைச் சந்தித்த ஒரு அரசியல் இயக்கம் வேறெங்கும் இருக்காது என்று குறிப்பிட்ட அவர், ஒற்றைத் தோல்விக்கே ஓடி ஒழிந்து, சிதைந்து போன கட்சிகள் தமிழ்நாட்டில் எத்தனையோ உண்டு என்று சுட்டிக்காட்டினார். ஆனால், இத்தனை முறை தோற்றும் சற்றும் தளராமல், அதே உறுதியோடு, அதே புத்துணர்ச்சோடு களத்தில் நிற்கும் தன் பிள்ளைகளை நினைத்துப் பெருமைப்படுவதாக சீமான் உணர்ச்சிப் பெருக்குடன் பேசியுள்ளார்.

​மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் அனைத்தையும் தமக்கான போர்க்களமாக நினைத்துத் தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என்று சீமான் கட்டளையிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி என்பது வெறும் எலிவேட்டையாடுகிற பூனை அல்ல, அது தமிழ் பேரினத்தின் பகையை ஒட்டுமொத்தமாக வீழ்த்த வந்த புலி என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்று அதிரடியாக முழங்கினார். தங்களது வெற்றியை அரசியல் எதிரிகள் தற்காலிகமாக வேண்டுமானால் தள்ளிப் போடலாமே தவிர, அதை யாராலும் எப்போதும் தடுத்து நிறுத்தவே முடியாது என்று சீமான் விடுத்த இந்த நேரடி சவால் சோசியல் மீடியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.