காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (28). இவர் ஊர்க்காவலப்படை போலீசாகப் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த சோனியா, நேற்று ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சோனியாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சோனியாவை அவரது கணவரான சோமசுந்தரம்தான் கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவாகியுள்ள சோமசுந்தரத்தைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே, கொலையாளி கணவனை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி சோனியாவின் உறவினர்கள்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு, பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.