அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவிலும் உரிய பதவிகள் மற்றும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத சூழலில், அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் இணைந்து செயல்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைவதே தமக்குச் சிறப்பான எதிர்கலத்தைத் தரும் என்று அவரது மகன் ரவீந்திரநாத் அறிவுறுத்தியதாகவும், அதற்கு ஓ.பி.எஸ்-ம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலைத் த.வெ.க. தலைமையும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் த.வெ.க.-விற்கு வலுவான முகங்கள் குறைவாக உள்ள குறையைப் போக்க ஓ.பன்னீர்செல்வத்தின் வருகை பேருதவியாக இருக்கும் என்று கட்சித் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்திற்குத் த.வெ.க. தலைமையும் உடன்பாடு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு த.வெ.க.வில் மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், விரைவில் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இடைத்தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் த.வெ.க. சார்பில் போட்டியிடவும், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அவரது மகன் ரவீந்திரநாத்தைக் களம் இறக்கவும் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகப் பேசப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
