பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் மாணவர்களையும் பெண்களையும் அவதூறாக விமர்சித்த விவகாரத்திற்கு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜென் இசட் (Gen Z) மாணவர்களைச் ‘சாக்கடை’ என்றும், பெண்களை மிகவும் தரம் தாழ்ந்தும் கங்கனா விமர்சித்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய CJP-யின் தலைமைத் தொடர்பாளர் சௌரவ் தாஸ், கங்கனாவின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். “அவருடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே அவரைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை; அப்படியிருக்க நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய ‘ஜென் இசட்’ அல்லது ‘ஜென் ஆல்ஃபா’ தலைமுறை இளைஞர்கள் யாரும் கங்கனாவை ஒரு தீவிரமான அரசியல்வாதியாகப் பார்ப்பதோ அல்லது அவரது கருத்துக்களைப் பொருட்படுத்துவதோ இல்லை என்றும் சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார். கங்கனா தனது மண்டி தொகுதிக்குச் சென்றபோது, எம்பி பதவிக்கு இவ்வளவு வேலை இருக்கும் என்று தான் நினைக்கவில்லை எனத் தெரிவித்து வெளியான பழைய வீடியோவை அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதி, பொதுப்பணியில் காட்டும் இந்த அலட்சியமே அவரது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
