தமிழகத்தில் அமையவுள்ள புதிய தவெக அமைச்சரவையில் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து, பிரபல திரைஇயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக அமைச்சரவையில் 4 பெண்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை” எனப் பாராட்டியுள்ளார்.

மேலும், தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) இணைய முடிவு செய்துள்ள நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பதையும் வரவேற்றுள்ள அவர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவத்தை வலுப்படுத்தவும் வழிவகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.