மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தை இறந்த பிறகு தாய் மறுமணம் செய்து கொண்டதால், தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மணமகனின் தந்தை, “எனது 42 வயது மகனுக்கு இந்த 13 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைத்தால் மட்டுமே, என் மகளை உங்கள் பேரனுக்கு திருமணம் செய்து வைப்பேன்” எனப் பகீர் நிபந்தனை விதித்துள்ளார்.
இதற்குச் சிறுமியின் தாத்தா பேராசையுடன் சம்மதித்து, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பறக்கும் படை அதிகாரிகள், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இரு குடும்பத்தினரையும் எச்சரித்துத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி, ஏப்ரல் 26-ஆம் தேதி இரவோடு இரவாகச் சிறுமியை இந்தூரிலிருந்து உஜ்ஜைனுக்குக் கடத்திச் சென்ற குடும்பத்தினர்.
அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து 42 வயது நபருக்கு ரகசியமாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் மீண்டும் சிறுமியைத் தாத்தா வீட்டிற்கே அழைத்து வந்துள்ளனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு மாமியார் வீட்டிற்குச் செல்லுமாறு சிறுமியை வற்புறுத்தி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், குழந்தை திருமணத்தடைச் சட்டத்தின் கீழ் மணமகன், அவரது உறவினர்கள் மற்றும் சிறுமியின் தாத்தா, பாட்டி உட்பட 13 பேர் மீது போலீசார் நேற்று அதிரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
