மனிதாபிமானமும் கருணையும் நிறைந்த ஒரு நெகிழ்ச்சியான செயலாக, பெங்களூரு சென்னம்மகெரே அச்சுக்கட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள், அரசு காவல் கான்ஸ்டபிள் தேர்வு எழுதச் சென்ற தாயின் எட்டு மாதக் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா கல்லூரி தேர்வு மையத்திற்கு, மாநிலக் காவல் கான்ஸ்டபிள் தேர்வு எழுதுவதற்காக பெண் தேர்வர் ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் வந்துள்ளார். அவர் தேர்வு அறைக்குள் நுழைய முயன்றபோது, குழந்தை திடீரென விடாமல் அழுதுள்ளது. குழந்தையைச் சமாதானப்படுத்த அந்தத் தாய் எவ்வளவோ முயன்றும் குழந்தை தொடர்ந்து அழுததால், தேர்வை எழுதுவதா அல்லது குழந்தையைக் கவனித்துக் கொள்வதா என்று அறியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.
View this post on Instagram
அந்தத் தாயின் தவிப்பைக் கவனித்த தேர்வு மையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் உடனடியாக அவரிடம் சென்று, தாங்கள் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாகவும், கவலையின்றித் தேர்வை எழுதச் சென்றும் உறுதியளித்தனர்.
காவலர்களின் இந்த அரவணைப்பால் மன நிம்மதியடைந்த தாய், தேர்வு அறைக்குள் சென்று தேர்வை எழுதத் தொடங்கினார். தேர்வு நடைபெறும் முழு நேரமும், அந்தப் பெண் காவலர்கள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியும், விளையாட வைத்தும், எந்தவித அழுகையுமின்றிப் பாசத்தோடு பராமரித்தனர். தேர்வு முடிந்ததும் வெளியே வந்த அந்தத் தாய், தனக்குத் தக்க சமயத்தில் உதவிய பெண் காவலர்களுக்குத் தன் கண்ணீர் மல்கக் நன்றியைத் தெரிவித்தார்.
காவல்துறை என்பது சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அரவணைப்பும் மனிதநேயமும் மிக்கது என்பதை நிரூபித்துள்ள பெங்களூரு பெண் காவலர்களின் இந்தச் செயலுக்குப் பொதுமக்களிடம் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
