சென்னையில் பெற்ற மகளையே கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நபர், ஜாமீனில் வெளியே வந்த சில நாட்களிலேயே தனது மனைவியையும் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பெரம்பூரைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ரெபேக்கா . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.

சதீஷின் நடத்தை சரியில்லாததால், அவரிடமிருந்து விவாகரத்து கோரியும், தங்களது பெண் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும் ரெபேக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையே, நீதிமன்றத்தின் மூலம் குழந்தையை தன்னைவிட்டுப் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த ஆண்டு சதீஷ் தனது சொந்த மகளைக் கொடூரமாகக் கொலை செய்தார். மேலும், தானும் தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ், சிகிச்சைக்குப் பிறகு குணமாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கில் சதீஷ் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் ஒரு தனியார் வங்கியில் ரெபேக்கா கேஷியராகப் பணிபுரிந்து வரும் நிலையில்  வழக்கம்போல் அவர் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த ரெபேக்கா உடனடியாக மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோட முயன்ற சதீஷை மடக்கிப் பிடித்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையைக் கொன்ற நபர், தற்போது மனைவியையும் தீர்த்துக்கட்ட முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.