கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஒரு தனியார் நிறுவன பின்புறம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் குறித்த வழக்கில், கள்ளக்காதலன் மற்றும் அவரது தந்தையைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் தீயில் கருகிய நிலையில் கிடந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து சென்ற மோட்டார் சைக்கிளும், அந்தத் தனியார் இடத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரியும் காட்சியும் பதிவாகியிருந்தது.
மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில், அது பொள்ளாச்சியில் இருந்து வந்ததும் பழனிமுத்து (35) மற்றும் அவரது தந்தை குருநாதன் (60) ஆகியோர் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
அதாவது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் குடியேறியுள்ளனர். பழனிமுத்து ஏற்கனவே திருமணமாகி, மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே சங்கீதா (30) என்பவருடன் பழனிமுத்துவுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதா தன் குடும்பத்தை விட்டுவிட்டு பழனிமுத்துவுடன் வந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையே பணப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவும் இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியுள்ளது. அப்போது உல்லாசமாக இருக்க அழைத்தபோது சங்கீதா மறுக்கவே, ஆத்திரமடைந்த பழனிமுத்து சுத்தியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க தனது தந்தை குருநாதனின் உதவியை நாடியுள்ளார். பின்னர் தந்தை மற்றும் மகன் இணைந்து சங்கீதாவின் உடலைச் சாக்குப்பையில் கட்டி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளனர். மேலும் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கி, அதனைச் சங்கீதாவின் உடலின் மீது ஊற்றி எரித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் இளம்பெண்ணைப் பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை மற்றும் மகனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
