விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்ன கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (23), இவரது மனைவி சுவாதி (22). இவர்களுக்கு விஷ்ணுபிரியா (3) என்ற பெண் குழந்தை இருந்தது. சுவாதி அப்பகுதியில் உள்ள தனிஅயர் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். அப்போது  அங்கு வேலை பார்த்த  விக்னேஸ்வரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதற்கிடையே, சுவாதிக்கும் அவரது கணவர் துரைப்பாண்டிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி கடந்த 25 நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்தார். குழந்தையுடன் சிவகாசி அருகே வசித்து வந்த சுவாதியுடன், விக்னேஸ்வரன் ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதையறிந்த சுவாதியின் உறவினர்கள், குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு கணவன் – மனைவியாக சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், துரைப்பாண்டியுடன் வாழ முடியாது என்றும், விக்னேஸ்வரன் தான் தன் கணவர் என்றும் சுவாதி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கணவர் து பலமுறை நேரில் அழைத்தும், சுவாதி அவரை அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில், கள்ளக்காதலன் விக்னேஸ்வரன் தினமும் மது குடித்துவிட்டு வந்து சுவாதியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன், சுவாதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் உல்லாசமாக இருக்க அழைத்தபோது, சுவாதி அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற விக்னேஸ்வரன், அங்கிருந்த 3 வயது குழந்தை விஷ்ணுபிரியாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், முகத்தில் நகத்தால் கிள்ளியும், வயிற்றில் சரமாரியாகத் தாக்கி கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை விஷ்ணுபிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று கொடூரச் செயலில் ஈடுபட்ட விக்னேஸ்வரனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுக்காகக் கணவனைப் பிரிந்து சென்ற பெண்ணின் கைகூடாத வாழ்க்கையால், 3 வயது பிஞ்சு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.