மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம், தஹேலி கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை ஒரே நொடியில் சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளது. சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீரில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு சிறு குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.
எதிர்பாராத விதமாக வந்த வெள்ளத்தின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த கொடூரமான சூழலில், கண்முன்னே சீறிப்பாய்ந்த நீர் பெருக்கு, அந்தப் பெண்ணையும் அவரது இரு பிஞ்சு குழந்தைகளையும் அடித்துச் சென்றது. குடும்பத் தலைவன் மட்டும் கஷ்டப்பட்டு அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையைப் கெட்டியாகப் பிடித்துத் தொங்கியபடி, நல்வாய்ப்பாக உயிருடன் மீட்கப்பட்டார்.
தான் உயிர பிழைத்த போதிலும், தன் கண்முன்னேயே தனது மனைவியும், ஈரக்கொலையான இரண்டு பிஞ்சு குழந்தைகளும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததைக் கண்ட அந்த நபரின் கதறல், அங்கு கூடியிருந்த அனைவரின் நெஞ்சையும் பிளப்பதாக இருந்தது.
“என் கண்ணெதிரேயே என் குடும்பமே அடிச்சுட்டுப் போயிருச்சே… என் இதயத்தின் துண்டுகள் வெள்ளத்துல மிதந்து போறதை பார்த்துட்டு ஒன்னுமே பண்ண முடியாம நின்னேனே” என்று அவர் கண்ணீர் விட்டுப் புலம்பிய காட்சி, அப்பகுதி மக்களைக் கடுமையான சோகத்தில் ஆழ்த்தியது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களைப் பிணமாகவே மீட்டெடுத்தனர். இயற்கையின் இந்த கொடூரமான தாண்டவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், யவத்மால் மாவட்டம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளின் கரைகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணமும், அந்த நபருக்குத் தேவையான மனநல ஆதரவும் வழங்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த வேதனையுடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
