உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் ஆடல் பாடலுடன் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மாப்பிள்ளையின் தம்பி கூட்டத்திற்கு மத்தியில் மணமகளின் சேலையின் நுனிப்பகுதியைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செயலால் கடும் கோபமடைந்த மணப்பெண், அந்த நபரை அங்கேயே கண்டித்ததோடு, இது குறித்து தனது தாய் மாமாவிடம் புகார் அளித்தார். அவர் உடனடியாக மாப்பிள்ளையின் குடும்பத்தினரிடம் இது குறித்து தட்டிக் கேட்க, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது.

அங்கு பலரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், திருமண வீட்டிலேயே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த எதிர்பாராத மோதலில் மாப்பிள்ளையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இத்தனை களேபரங்களைக் கண்டு அதிருப்தி அடைந்த மணப்பெண், தனக்கு இந்தத் திருமணத்தில் இனி விருப்பமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நிலைமை கைமீறிச் செல்லவே, இருதரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு காவல்துறையினர் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட விவாதத்திற்குப் பிறகு இரு தரப்பினரும் சமாதானம் அடைந்தனர். மேலும், மோதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் முன்னிலையில் எந்தப் பிரச்சினையும் இன்றி அன்றைய தினம் மாலை திட்டமிட்டபடியே திருமணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. கோர விபத்து போலத் தொடங்கிய இந்தத் திருமணக் கலாட்டா சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.