உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையாவில், புந்தேல்கண்ட் விரைவுச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட ரன்வீர் சிங் யாதவ் என்பவரது சடலம், விபத்து அல்ல அது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை 72 மணி நேரத்திற்குள் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

மதுவுக்கு அடிமையான ரன்வீர், சொத்துகளை விற்று பணத்தை வீணடித்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ரன்வீர் தனது மனைவியைத் தாக்கியதால், ஆத்திரமடைந்த அவரது மனைவி வினிதா, மகன் ஹர்ஷ் மற்றும் உறவினர் குர்ஜீத் ஆகிய மூவரும் சேர்ந்து கோடாரி மற்றும் இரும்புக் கம்பியால் ரன்வீரை அடித்துக் கொன்றுள்ளனர்.

கொலைக்குப் பிறகு, இது சாலை விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சடலத்தைப் பைக்கில் எடுத்துச் சென்று விரைவுச்சாலையில் வீசியுள்ளனர். ஆனால், காவல்துறையின் தீவிர விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் மூலம் உண்மை அம்பலமானது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பைக்கை மீட்ட போலீஸார், ரன்வீரின் மனைவி, மகன் உட்பட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப உறுப்பினர்களே சேர்ந்து ஒருவரைக் கொன்று விபத்து நாடகமாடியது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.