நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே இன்றளவும் தீராத ஒன்றாகவே நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உரிய நீர் பங்கீட்டை இறுதி செய்து உத்தரவிட்டபோதிலும், போதிய மழை இல்லாத காலங்களில் தமிழகத்திற்கு வழக்கமாக வர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குக் கடும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலே நிலவுகிறது. இதனிடையே, காவிரியின் குறுக்கே 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாடு அண கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தின் டெல்டா விவசாயிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், மேகதாடு அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமாரைச் சந்தித்துப் பேச தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கர்நாடக முதல்வர்களை நேரில் சந்தித்துப் பேசிய பாணியை தற்போது முதல்வர் விஜய்யும் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த நேரடி பேச்சுவார்த்தை முயற்சிக்குத் தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
நேரடி பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், பல்லாண்டுகால சட்டப் போராட்டத்தின் மூலம் நாம் பெற்ற உரிமைகளை இந்த பேச்சுவார்த்தை சிதைத்துவிடும் என்றும், நீதிமன்றத்தில் இது பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். இதேபோல் பாமக தலைவர் அன்புமணியும், மேகதாது அணை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது அந்த சட்டவிரோத கோரிக்கைக்கு இருதரப்பு பிரச்சனை என்ற அங்கீகாரத்தை அளித்துவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இருக்கும்போது, அதைத் தாண்டி நேரடியாகப் பேசுவது சட்டரீதியாகத் தமிழகத்தின் பலத்தைக் குறைத்துவிடும் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கவலையாக உள்ளது.
இருப்பினும், முதல்வர் விஜய்யின் இந்த புதிய முயற்சியை நேர்மறையாக அணுகுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர். இதுகுறித்து அவர் கூறுகையில், “முதல்வர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில தலைவர்களைச் சந்திப்பது ஆட்சேபனைக்குரியது அல்ல. தனிப்பட்ட சந்திப்புகள் மூலமே இரு மாநிலங்களுக்கு இடையேயான இணக்கம் அதிகரிக்கும். கர்நாடக அரசின் உண்மையான மனநிலையைத் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய முன்னெடுப்பு வெற்றியில் முடிந்தால் தமிழகத்திற்கு நல்லதுதானே என்றும், பேச்சுவார்த்தை இணக்கமாக முடியலாம் அல்லது உரிமையைப் போராடிப் பெற வேண்டிய சூழலும் ஏற்படலாம் என்றும் அவர் தனது பார்வையை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
