சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த எம்.செட்டிப்பட்டி மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சோப்பு, சலவைத் தூள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு தேவி ஸ்ரீ (14) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான தேவி ஸ்ரீ, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கமாகவே மாணவி தேவி ஸ்ரீ நீண்ட நேரம் செல்போனைப் பார்த்துக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். அந்த வகையில், சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் மாணவி செல்போனில் மூழ்கியிருந்ததைப் பார்த்துள்ளனர். உடனே பெற்றோர், “பள்ளிக்கு நேரமாகிறது, அதை விட்டுவிட்டு இன்னும் செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே… இப்படிச் செய்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உன்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று கண்டித்துவிட்டு அவரிடமிருந்த செல்போனைப் பறித்துள்ளனர்.
பெற்றோர் கண்டித்த கோபத்திலும் மனவருத்தத்திலும் மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு மதியம் 12.30 மணியளவில் தனக்கு திடீரென வயிறு வலிப்பதாக அருகில் இருந்த ஆசிரியரிடம் கூறியுள்ளார். தகவலறிந்து பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த பெற்றோரிடம் தேவி ஸ்ரீ உண்மையை உடைத்துள்ளார். “நீங்கள் என்னைச் திட்டியதால், வீட்டில் வைத்து 10 சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டேன்; பள்ளியிலோ மேலும் 20 மாத்திரைகளைத் தின்றுவிட்டேன்” என்று அவர் கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு முதலுதவிக்காகக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் பயன்பாட்டைத் தடுத்ததால் மாணவி விபரீத முடிவு எடுத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
