கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை அய்யப்பன் கடந்த சில நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று காலை அய்யப்பன் அந்த மாணவியின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாணவி தனியாக இருப்பதை நோட்டமிட்ட அவர், திடீரென அவரிடம் சென்று தன்னைத் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், மாணவி அவரது காதலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மாணவியிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகத் தெரிகிறது.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாணவி சத்தம் போட்டுள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த அய்யப்பன், “சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதையும் மீறி மாணவி தொடர்ந்து கூச்சலிடவே, ஆத்திரம் தலைக்கேறிய அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து மாணவியின் கழுத்து மற்றும் முதுகில் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து மாணவி அலறித்துடிக்க, அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்தனர். பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்டதும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கழுத்தில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டுச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, மாணவியை கொலை செய்ய முயன்ற குற்றவாளி அய்யப்பன் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் அய்யப்பனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
