ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் பகுதியில் மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடைக்குள் புகுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர்.

கோமல் (12) மற்றும் கரிமா (6) ஆகிய இரண்டு சிறுமிகளும் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் மின்கம்பங்களை ஏற்றிவந்த டிராக்டர் ட்ராலி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து நேராகக் கடைக்குள் மோதியது. இதனால் அந்த இரண்டு சிறுமிகளும் வாகனத்திற்கும் கடையின் முன் கவுண்டருக்கும் இடையில் சிக்கிக் கொண்டனர். இந்த கோர விபத்தில் இரு சிறுமிகளும் பலத்த காயமடைந்தனர். உடனே அங்கு ஓடிவந்த உள்ளூர் மக்கள் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்தச் சிறுமிகள் இருவருக்கும் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

 

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது. இந்தக் விபத்தில் கடை நடத்தி வந்த பெண்ணுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் வாகனத்தில் இருந்த மற்ற மூவரும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த டிராக்டர் ஒரு ஒப்பந்தக்காரருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறத. ஏறி இறங்கும் சாலையில் செல்லும்போது அதிகப்படியான பாரம் காரணமாக வாகனம் தன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. டிரைவர் நிலைதடுமாறியதால், துரிதமாகச் சென்ற வாகனம் மளிகைக் கடை மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.