கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அருகில், கணவனின் கள்ளத்தொடர்பு தொல்லை தாங்காமல் 7 மாதக் குழந்தையின் கண் முன்னே இளம் தாய் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சானிகா அதாவது கவுடா (24) என்பவருக்கும் கேப் டிரைவராக வேலை செய்து வரும் ஷரன் கவுடா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே ஷரன் கவுடாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது சானிகாவுக்குத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் சானிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவருடன் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்ததுடன், அதன் பிறகு அவர் கணவனுடன் சேர்ந்து வாழச் செல்லாமல் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில், தனது கள்ளக்காதலியுடன் பேசிய ஆடியோ ஒன்றை ஷரன் கவுடா தனது மனைவியின் செல்பேசிக்கு வேண்டுமென்றே அனுப்பி வைத்துள்ளார். தன் கணவர் வேறு பெண்ணுடன் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த சானிகா, உடனடியாக அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு கதறி அழுது வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது வீடியோ கால் ஓடிக்கொண்டிருக்கும் போதே, தனது 7 மாதக் குழந்தை அருகில் தூங்கிக் கொண்டிருந்த அறையில் மின்விசிறியில் சானிகா தூக்குப்போட்டு விபரீத முடிவெடுத்துள்ளார்.

வீடியோ காலிலேயே மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு கணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சானிகாவின் தந்தை  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள கணவர் ஷரன் கவுடாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.